அயோத்தியிலுள்ள ராமர் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த விலை உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் முழுமையாக பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கோவில் காணிக்கை நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, உத்தர பிரதேச அரசு சிறப்பு விசாரணை குழு (SIT) அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட சிலர் காணிக்கையை திருடியதாக கண்டறிந்தனர். இந்த வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய் மற்றும் உறுப்பினர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஓய்வு பெற்ற இந்திய வனப்பணி அதிகாரி கிருஷ்ண மோகன் இடைக்காலப் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு பேசிய பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி, நன்கொடைப் பதிவேட்டில் 30 கிலோ தங்கம், 1,518 கிலோ வெள்ளிப் பொருட்கள் என மொத்தம் 2,926 மதிப்புமிக்க பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் கணக்கில் இருந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.





