25% எத்தனால் கலந்த ‘இ-25’ பெட்ரோல் விரைவில் அறிமுகமாகும் என்ற செய்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது. தற்போதுள்ள ‘இ-20’ அளவைத் தாண்டி எத்தனால் கலப்பு விகிதத்தை உயர்த்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பெட்ரோலியத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நோக்கில், சாதாரண பெட்ரோலுடன் 20% எத்தனால் கலந்த எரிபொருள் ‘இ-20’ பெட்ரோல் என அழைக்கப்படுகிறது. இந்த வகை பெட்ரோல் தற்போது அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், கலப்பு விகிதத்தை 25% ஆக உயர்த்தி ‘இ-25’ பெட்ரோலை மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது என்ற தகவல்கள் பரவின. இதனால் வாகனங்களின் செயல்பாடு மற்றும் எரிபொருள் சிக்கனம் பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால், அதிகாரிகள் இதை மறுத்து, விரிவான சோதனைகள் மற்றும் மதிப்பீடுகளுக்குப் பிறகே ‘இ-20’ பெட்ரோல் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருப்பதாக கூறினர். மேலும், சுமார் 20 கோடி இருசக்கர வாகனங்களும், 20 லட்சம் நான்கு சக்கர வாகனங்களும் எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கி வருவதாக தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் எத்தனால் கலப்பு விகிதத்தில் மாற்றங்கள் செய்யப்படுமானால், அது அறிவியல் பூர்வமான சோதனைகள் மற்றும் தொழில்நுட்ப உறுதிப்படுத்தல்களின் அடிப்படையிலேயே அமையும் என்றும், தற்போது ‘இ-20’க்கு மேல் செல்ல எந்த முடிவும் இல்லை என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.