புதுடில்லி: சமூக வலைதளங்களில் தினமும் பதிவேறும் கோடிக்கணக்கான பதிவுகள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றத்திற்கு முன்பே கண்காணித்து வடிகட்டுவது நடைமுறையில் சாத்தியமற்றது என கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜரான போது, விசாரணை தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதாக கூறப்படுகிறது.
அனுமதியின்றி எடுக்கப்பட்ட வீடியோக்களை, ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நீதிமன்ற விதிகளுக்கு புறம்பாக சமூக வலைதளங்களில் பரப்பியதாக வழக்கறிஞர் வைபவ் சிங் மனு தாக்கல் செய்தார். இதுபோன்ற உள்ளடக்கங்களை தளங்கள் முன்கூட்டியே கண்டறிந்து அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி. காமேஷ்வர் ராவ் மற்றும் மன்மீத் பிரிதம் சிங் அரோரா அடங்கிய அமர்வு, கூகுள், மெட்டா, எக்ஸ் உள்ளிட்ட தளங்களுக்கு அந்த வீடியோக்களை உடனடியாக நீக்க உத்தரவிட்டதுடன், பதில் மனு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியது.
இதையடுத்து தாக்கல் செய்த பதில் மனுவில், தங்களை “சூப்பர் சென்சார்” அமைப்பாக மாற்ற முடியாது என்றும், சட்டவிரோத உள்ளடக்கத்தை தாங்களாகவே கண்டறிந்து நீக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்றும் கூகுள், மெட்டா தெரிவித்தன. நீதிமன்றம் சட்டவிரோதம் என குறிப்பிட்ட பக்கங்களின் லிங்குகள் வழங்கப்பட்டால் மட்டுமே நீக்கம் செய்ய முடியும் என்றும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79ன் கீழ் சட்டப் பாதுகாப்பு இருப்பதாகவும் அவை குறிப்பிட்டன.





