சென்னை: எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுகள் குறித்து த.வெ.க. அரசிடம் விளக்கம் கேட்க கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் முடிவு செய்துள்ளதாக, ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே 7-ம் தேதி ஆட்சி அமைக்க உரிமை கோரி த.வெ.க. தலைவர் முதல்வர் விஜய் கவர்னரை சந்தித்தார். அதே காலகட்டத்தில், தன் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.-வை த.வெ.க. கவர்ந்திழுத்ததாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டினார்.

த.வெ.க. அரசு அமைந்த பிறகு, அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்ததாக கூறப்படுகிறது. மேலும் பல எம்.எல்.ஏ.க்களை த.வெ.க. இழுக்க முயல்கிறது என அ.தி.மு.க. குற்றம்சாட்டி வருகிறது. தங்களின் எம்.எல்.ஏ.க்களையும் இழுக்கும் முயற்சி நடப்பதாக தி.மு.க.வும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜூலை 4-ம் தேதி கவர்னரை சந்தித்த அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ. நிர்வாகிகள், த.வெ.க. அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறி, அதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அரசியல் சட்டத்தின் 167-வது பிரிவின் கீழ் மாநில அரசிடம் விளக்கம் கேட்க கவர்னருக்கு அதிகாரம் இருப்பதாகவும், அதன்படி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தது தொடர்பாக விளக்கம் கேட்க கவர்னர் பரிசீலித்து வருவதாகவும் ராஜ்பவன் வட்டாரங்கள் கூறுகின்றன.