பிரதமர் நரேந்திர மோடி ஜகார்த்தா சென்ற நிலையில், இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ உடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா–இந்தோனேஷியா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, மருந்து மற்றும் அரிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகள் இதில் இடம்பெற்றன.

பாதுகாப்புத் துறையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் மற்றும் அஸ்திரா ஏவுகணைகளை வாங்க இந்தோனேஷியா ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புத் தொழில்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இரு நாடுகளும் முடிவு செய்தன.

கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக, ஆச்சே மாகாணத்தில் உள்ள சபாங் துறைமுகத்தை இரு நாடுகளும் இணைந்து மேம்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளன. உலகின் முக்கிய கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான மலாக்கா ஜலசந்தியை கண்காணிக்கும் இடமாக இது குறிப்பிடப்படுவதால், இந்தியா–இந்தோனேஷியா கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இந்தோ–பசிபிக் பிராந்திய கூட்டாண்மையில் இது முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. நீல பொருளாதாரம் மற்றும் கடல்சார் வர்த்தகத்திலும் ஒத்துழைப்பை வளர்க்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

அரிய கனிமங்களின் விநியோகத் தொடரை வலுப்படுத்தும் வகையில், இந்தோனேஷியாவில் செம்பு, நிக்கல், அரிய மண் காந்தங்கள் உற்பத்தியில் இந்தியா முதலீடு செய்ய உள்ளது. மேலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் அரிய மண் காந்தங்கள் தயாரிப்பில் இரு நாடுகளின் நிறுவனங்கள் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில், இந்தியாவின் UPI பரிவர்த்தனை முறை இந்தோனேஷியாவின் பரிவர்த்தனை முறையுடன் இணைக்கப்படுவதால் சுற்றுலா பயணிகளின் பண பரிவர்த்தனைகள் எளிதாகும்.

செய்தியாளர்களிடம் மோடி பேசுகையில், இந்தியா–இந்தோனேஷியா உறவு புதிய அத்தியாயத்தை எட்டியுள்ளதாகவும், இந்தோ–பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை, வளத்தை வலுப்படுத்தும் என்றும் கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிராக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், பிராந்திய பாதுகாப்பை பாதிக்கும் ஒருதலைபட்ச நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேற்காசிய நிலவரம் குறித்தும் பேச்சு நடந்ததாக கூறிய அவர், பாலஸ்தீன விவகாரத்தில் நீடித்த அமைதிக்கான இரு நாடுகள் கொள்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.