வளர்ப்பு நாய் ஒருவரை தாக்கினால் அதற்கான பொறுப்பு நாயின் உரிமையாளருக்கே என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாயை கட்டுப்பாடின்றி விடுவது பொறுப்பற்ற செயல் என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கு பெங்களூருவைச் சேர்ந்த எல்ஹாம் ரெசா அளித்த புகாரைத் தொடர்ந்து உருவானது. அவர், பிப். 23 அன்று இந்திரா நகரில் தோழி லலிதாவின் வீட்டுக்கு சென்றபோது அங்கு வளர்க்கப்பட்ட நாய் திடீரென பாய்ந்து முகத்தில் கடுமையாக தாக்கியதாக போலீசில் தெரிவித்தார். இதற்கு நாயின் உரிமையாளர் கார்த்திக் ஸ்ரீவஸ்தவா மற்றும் லலிதாவின் கவனக்குறைவுதான் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து போலீசார் கார்த்திக் ஸ்ரீவஸ்தவா, லலிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, நகரின் 10வது ஏ.சி.எம்.எம். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி லலிதா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
விசாரணையில் லலிதா தரப்பு, புகார்தாரர் அந்த குடும்பத்தின் செல்ல நாயுடன் முன்பே பழகியவர் என்றும், மருத்துவரின் அறிக்கையில் காய அடையாளங்கள் பதிவு செய்யப்படவில்லை என்றும் வாதிட்டது. மேலும் அந்த வகை நாய் ஆபத்தானது அல்ல என்றும், புகார் அளிப்பதில் சுமார் ஒரு மாத தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், போலீசில் செல்லும் முன் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்பட்டது.
நீதிபதி நாகபிரசன்னா மனுவை நிராகரித்து, நாயை கட்டவிழ்த்து விடுவது பொறுப்பற்ற செயல் என்றும், அவ்வாறு விடப்பட்ட நாய் மற்றவர்களை தாக்கினால் உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இது அனைத்து நாய் உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறி, மனுதாரர் வழக்கை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.





