தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மஹாராஷ்டிராவில் கனமழை தாக்கம் தொடர்கிறது. மும்பையில் கடந்த நாட்களில் நீடித்த கனமழை நேற்று சற்று தணிந்தாலும், புனே மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்தது.

புனே மாவட்டத்தின் பிரபல மலைப் பிரதேசமான லோனாவாலாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் புனே மாவட்டத்தின் 22 இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது. சில பகுதிகளில் ரயில் பாதைகள் சேதமடைந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மலைப்பாதை அபாயப் பகுதிகளில் பணியாற்றிய ரயில்வே கண்காணிப்பு ஊழியர்கள் சரியான நேரத்தில் எச்சரிக்கை வழங்கியதால் எந்த ரயிலும் நிலச்சரிவில் சிக்கவில்லை. மும்பை–புனே விரைவுச்சாலையிலும் போக்குவரத்து முடங்கியது; மேலும் புனே மாவட்ட மலைப் பகுதிகளுக்கு இன்றும் ‘ரெட் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.