நீர்நிலைகளை தண்டனை அஞ்சாமல் ஆக்கிரமிக்கலாம் என யாரும் நினைக்கக் கூடாது என்று, நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கடுமையாக எச்சரித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன் தாக்கல் செய்த மனுவில், கல்லாலங்குடியில் உள்ள சமுத்திரக்குளம் நீர்நிலையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அவற்றை அகற்ற 2024-ல் ஆறு மாதங்களில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அது நிறைவேறவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து கலெக்டர் அருணா, ஆலங்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ், திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார். வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பில், நீர்நிலையில் பல வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் அதிகாரிகள் நில அளவீடு செய்யவும், நோட்டீஸ் வழங்கவும் முடியாத சூழல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், அதிகாரிகள் அளவீடு மேற்கொள்ளவும் நோட்டீஸ்களை வழங்கவும் மாவட்ட எஸ்.பி. போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். தேவைப்பட்டால் நில அளவையின்போது தடையுத்தரவும் பிறப்பிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.





