இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிராம்பனன் ஹிந்து கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
ஜகர்த்தாவில் நடைபெற்ற சந்திப்புகளில், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் இருநாட்டு உறவுகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தைகளின் போது, இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் அஸ்ட்ரா வான்வழி ஏவுகணைகளை இந்தோனேசியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தோனேசியாவின் உயரிய விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருதை அதிபர் பிரபோவோ சுபியான்டோ பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி அதிபர் பிரபோவோவுடன் பிராம்பனன் கோவிலுக்கு சென்றார். இருவரும் ஹெலிகாப்டரில் பயணித்த புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். ஹெலிகாப்டரில் இருந்தபடி கோவிலின் அழகிய கோபுர அமைப்புகளை ரசித்த அவர், பின்னர் அதிகாரிகளுடன் கோவிலுக்குள் சென்று தீபாராதனை கண்டு வழிபட்டார்.
9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். சுமார் 40 ஹெக்டேர் பரப்பில் 240 சன்னதிகளுடன் அமைந்துள்ள இந்த கோவில் யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளில் இந்திய தொல்லியல் துறை இந்தோனேசியாவுக்கு உதவி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





