புதுடில்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில், தேசிய அளவிலான பல முக்கியத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அமைப்பை முழுமையாக மறுசீரமைக்கும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 3-ஆம் தேதி நடைபெற்றது. வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தேர்வை என்.டி.ஏ. ரத்து செய்து, ஜூன் 21-ஆம் தேதி மறு தேர்வை நடத்தியது. தொடர்ந்து ஏற்படும் கசிவு குற்றச்சாட்டுகள் காரணமாக அமைப்பு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதையடுத்து, அடுத்தாண்டு முதல் நீட் தேர்வு கணினி வழி முறையில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இந்த மாற்றத்துடன், தேர்வு நடத்தும் முறையிலும் கால அட்டவணையிலும் முக்கிய மாற்றங்களை கொண்டு வர கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திட்டத்தின் படி, நாடு முழுவதும் 500 நகரங்களில் உள்ள சுமார் 1,000 மையங்களில் 5 முதல் 6 நாட்களுக்கு நீட் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களாக பெரும்பாலும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா போன்ற அரசு கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படலாம்; சில புகழ்பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களும் பரிசீலிக்கப்படலாம்.

ஒவ்வொரு மையத்திலும் நாளொன்றுக்கு சுமார் 500 மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. தேர்வு கால அட்டவணை, தேர்வு நகரங்கள் உள்ளிட்ட முழுமையான அறிவிப்பு, என்.டி.ஏ. மறுசீரமைப்பு முடிந்த பின் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது; இந்த பணிகள் அக்டோபருக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.