தமிழகத்தின் ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், கோவில்களில் விஐபி தரிசனத்தை முறைப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். கோவில் நடைமுறைகளை உடனடியாக முழுமையாக மாற்றிவிட முடியாது என்றும் அவர் கூறினார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு மாநில பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள், இடிந்த நிலையில் உள்ள கோவில்கள், வழிபாடு இல்லாத கோவில்கள் ஆகியவற்றை கண்டறிந்து திருப்பணி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுரப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் கூறினார். திருச்செந்தூர் கோவிலில் சேவை கட்டண உயர்வு தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டதாகவும், மக்களைத் தூண்டும் நோக்கில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

புதிய கட்டண நிர்ணயம் மக்கள் கருத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், ஸ்ரீரங்கம் ‘யாத்ரி நிவாஸ்’ பெயரில் தொடங்கப்பட்ட போலி இணையதளம் தொடர்பாக வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு தரப்பில் ‘யாத்ரி நிவாஸ்’ முன்பதிவுக்கான அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.