2025-26 கல்வியாண்டுக்கான செயல்திறன் தரவரிசை குறியீடு (PGI) அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை இந்த அறிக்கை தரவரிசைப்படுத்துகிறது.
அறிக்கையின் படி, பள்ளிக் கல்வியில் சமூக நீதி மற்றும் சமத்துவம் பிரிவில் உச்ச தரமான “உத்கர்ஷ்” தகுதியுடன் தமிழகம், டில்லி, சண்டிகர் ஆகியவை முதலிடத்தைப் பெற்றுள்ளன.
கல்வி இடைநிற்றலைத் தவிர்ப்பது தொடர்பான குறியீட்டில் தமிழகம் “உத்தம்-1” தரநிலையின் கீழ் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் புதுச்சேரி மற்றும் கேரளா “உத்கர்ஷ்” தகுதியுடன் முதலிடத்தில் உள்ளன.
PGI மதிப்பீடு 70 காரணிகள் அடிப்படையில், உட்கட்டமைப்பு, கற்றல், தரம், ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட ஆறு முக்கிய பிரிவுகள் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. கல்வித் தரம் தொடர்பான பட்டியலில் சண்டிகர் முதலிடத்தையும், கேரளா, டில்லி, பஞ்சாப், தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன் ஆகியவை இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.





