தமிழகத்தில் ஆறு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலையாக (Deemed University) தரம் உயர்த்தப்பட்டதால், மாநில ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும் எம்.பி.பி.எஸ். இடங்களில் பெரிய அளவில் குறைவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தில் உள்ள 22 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் சுமார் 3,900 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் சிறுபான்மை கல்லூரிகள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 50% இடங்களையும், பிற தனியார் கல்லூரிகள் 65% இடங்களையும் வழங்கி வருகின்றன.

அதிகாரிகள் கூறுகையில், புனித பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம், சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, கற்பக விநாயக மருத்துவக் கல்லூரி ஆகியவை ஏற்கெனவே நிகர்நிலை பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு கல்லூரிகளும் இதே நிலைக்கு உயர்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆறு கல்லூரிகள் மாநில ஒதுக்கீட்டு அமைப்பிலிருந்து விலகுவதால், சுமார் 1,300 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் இருந்து பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அரசு ஒதுக்கீட்டுக்கான சுமார் 700 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டில் சுமார் 50 இடங்களும் பாதிக்கப்படலாம் என்றும், மீதமுள்ள நிர்வாக இடங்களிலும் தமிழக மாணவர்கள் இழப்பை சந்திக்கும் சூழல் உருவாகலாம் என்றும் அவர்கள் எச்சரித்தனர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அதிகாரிகள், நிகர்நிலை பல்கலையாக தரம் உயர்வதற்காக 12 கல்லூரிகள் தடையின்மைச் சான்று (NOC) கேட்டாலும் பல்கலை தரப்பில் எதற்கும் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் தேசிய மருத்துவ ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுவரை நான்கு கல்லூரிகளை நிகர்நிலை பல்கலையாக உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

நிகர்நிலை பல்கலையாக மாறினால் மாநில அரசுக்கு இடங்கள் ஒதுக்க வேண்டிய கட்டாயம் இல்லை; மேலும் ஆண்டு கட்டணத்தை முன்பு கூறப்பட்ட ரூ.13.5 லட்சம் வரம்பை விட உயர்த்தி ரூ.20 லட்சம் வரை வசூலிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தமிழக மாணவர்கள் சேர தேசிய அளவில் போட்டியிட வேண்டிய நிலை உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பல்கலையின் தடையின்மைச் சான்று இல்லாமல் தரம் உயர்வு பெற்றது தொடர்பாக சட்ட நடவடிக்கைக்கு அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதற்கிடையில், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை, கடந்த தி.மு.க. ஆட்சியின் அலட்சியத்தால் நடப்பு கல்வி ஆண்டிலேயே 650 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து விலகியதாக கூறி, அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.