தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க, அவர்களின் தொடர்பு வலையமைப்பை ‘குடும்ப மரம்’ (Family Tree) என்ற பெயரில் வரைபடமாக தயாரிக்கும் பணியை போலீசார் தொடங்கியுள்ளனர்.

போதைப் பொருளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையாக, கடந்த மூன்று நாட்களில் மாநிலம் முழுதும் சோதனைகள் நடத்தப்பட்டு 621 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சோதனைகளுடன் சேர்த்து, மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோரின் தொடர்புகளை கண்டறிய தகவல் சேகரிப்பும் நடக்கிறது.

போதைப் பொருள் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் பெயரில் சொத்துகள் வாங்கும் நிலை இருப்பதாக போலீசார் கூறினர். அத்தகைய சொத்துகள் மற்றும் தொடர்புடைய வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்படுகின்றன.

இதற்காக மனைவி, மகன், மகள், பெற்றோர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் பற்றிய விவரங்கள் சேகரித்து ‘குடும்ப மரம்’ பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில் பான், ஆதார், வங்கி கணக்கு விவரங்களும் சேர்க்கப்படுகின்றன.

சென்னை செங்குன்றம் பகுதியில் சமீபத்தில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த ‘யூடியூபர்’ கார்த்திக், தேவி உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.