துருக்கியின் அங்காராவில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க வருவதற்கு முன்னதாக, அமைப்பின் ராணுவ திறனை உயர்த்தும் வகையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியானது.
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பு (நேட்டோ) என்பது அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ராணுவ ஒத்துழைப்பு அமைப்பு. அதன் உச்சிமாநாடு தற்போது அங்காராவில் நடைபெறுகிறது.
சமீபத்தில், நேட்டோ அமெரிக்க ஆயுதங்களை மட்டுமே நம்பியிருக்கும் ‘பலவீனமான அமைப்பு’ என டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கான பதிலடியாகவே, ஐரோப்பிய நாடுகள் புதிய கொள்முதல் திட்டங்களை முன்வைத்து ராணுவ மேம்பாட்டை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அறிவிப்புகளின்படி, நேட்டோவின் 50 ஆண்டுகளுக்கு மேலான பழைய விமானங்களுக்கு மாற்றாக ஸ்வீடனின் ‘சாப்’ நிறுவனத்திடமிருந்து 10 அதிநவீன கண்காணிப்பு விமானங்களை வாங்க 10 நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும் 15 நாடுகள் இணைந்து ‘ஏர்பஸ்’ நிறுவனத்திடமிருந்து புதிய எரிபொருள் நிரப்பும் மற்றும் போக்குவரத்து விமானங்களை வாங்க ஒப்புக் கொண்டுள்ளன. கடற்படை கண்காணிப்பு திறனை உயர்த்த 5 புதிய டிரைடன் ட்ரோன்களை வாங்க 4 நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.
இவ்வறிவிப்புகள் டிரம்பை முழுமையாக கவரவில்லை என தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து அவர், அவர்களின் பணம் முக்கியமில்லை; அவர்களின் விசுவாசமே தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.





