சென்னை: த.வெ.க. உடன் பா.ம.க. நெருங்கினால் வன்னியர் சமுதாய ஓட்டு வங்கியில் சேதாரம் ஏற்படும் என, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாசுக்கு வன்னியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு அளிக்கும் கம்யூ. உள்ளிட்ட கட்சிகள் குடைச்சல் கொடுப்பதாகவும், அதை சமாளிக்கும் வகையில் த.வெ.க. பா.ம.க. உடன் நெருக்கம் காட்டுகிறது என்ற தகவல்களின் பின்னணியில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் ஆனந்தை அன்புமணி சமீபத்தில் சந்தித்தார். இதன் பின் த.வெ.க.–பா.ம.க. இடையே நட்பு மலர்ந்துள்ளதாக பேசப்படுகிறது.

வன்னியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெரும் தோல்வி கண்டாலும் பா.ம.க. நான்கு இடங்களில் வென்றது என்றும், இப்போது முதல்வர் விஜயுடன் நெருக்கம் ஏற்பட்டால் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் விஜயால் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின ஓட்டுகளைப் போலவே வன்னியர் ஓட்டுகளையும் த.வெ.க. குறிவைக்கிறது என அவர் கூறி, இதனால் பா.ம.க. பெறும் வன்னியர் ஓட்டுகளில் பாதிப்பு ஏற்படலாம் என்றார். பா.ஜ. கூட்டணி காலத்தில் வன்னியர் வாக்குகள் வேறு திசை செல்லாமல் தடுக்க வேண்டும் என நிறுவனர் ராமதாஸ் கூறிய எச்சரிக்கையை அன்புமணி நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.