சென்னை: தமிழகத்தில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர் நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற விவகாரத்தில், மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறி, சுகாதாரத்துறை அமைச்சர் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என்று ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தாங்கள் முன்பே சுட்டிக்காட்டிய தகவல்களையே அமைச்சர் தற்போது கூறியுள்ளதாகவும், இதன் மூலம் தங்களின் சந்தேகம் உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பதை வரவேற்றார்.
ஆனால், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறப்படும் நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு அமைச்சர் விளக்கம் தரவில்லை என்று அவர் கூறினார்.
இந்த நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பு, எந்த அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் கடமையைச் செய்யத் தவறினர், இது அலட்சியமா அல்லது திட்டமிட்ட பிழையா, யாருடைய அழுத்தத்தால் இது நடந்தது என்பவற்றுக்கு அரசு தெளிவான பதில் அளிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார். வழக்குத் தொடர்வது மட்டும் போதாது; முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டில் 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்வி கனவுடன் இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





