எல் நினோ எனப்படும் வானிலை மாறுபாடு காரணமாக தென்மேற்கு பருவமழை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ள நிலையில், மழைப்பொழிவு மற்றும் விவசாய பணிகளை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. வறட்சி அபாயம் உள்ள மாநிலங்களுக்கு கள அளவிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் வியூகங்களும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லியில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய பின், மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், நடப்பு காரிப் பருவத்தில் இதுவரை 8.64 கோடி ஏக்கரில் சாகுபடி நடந்துள்ளதாக கூறினார். இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 2.27 கோடி ஏக்கர் குறைவாகும் என்றும், பருவமழை தாமதமாக தொடங்கியதால் சோயாபீன் மற்றும் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, குறுகிய காலத்தில் விளையும் மற்றும் குறைந்த நீர் தேவைப்படும் மக்காச்சோளம், கம்பு, பாசிப்பயிறு போன்ற பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதைத் தட்டுப்பாடு ஏற்படாமல் நாடு முழுவதும் 1.75 லட்சம் குவின்டால் விதைகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஜூனில் 33% ஆக இருந்த மழைப்பொழிவு பற்றாக்குறை, ஜூலையில் மழை அதிகரித்ததால் தற்போது 24% ஆக குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மழை குறைவாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 262-இல் இருந்து 178 ஆக குறைந்துள்ளதாகவும் கூறினார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மூலம் தயாரிக்கப்பட்ட மாவட்ட அளவிலான அவசரகால திட்டங்கள் 13 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன; பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிக விவசாயிகளை இணைப்பதும், விவசாயக் கடன் ஒப்புதல்களை விரைவுபடுத்துவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பருவமழை கடுமையாக பொய்த்தால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்பதால், உபரி தீவனம் உள்ள பகுதிகளில் இருந்து பற்றாக்குறை பகுதிகளுக்கு கொண்டு செல்ல முன்கூட்டியே திட்டம் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எல் நினோ கண்காணிப்பு மையம், பயிர்-வானிலை கண்காணிப்பு குழு, மாநில கட்டுப்பாட்டு அறைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதுடன், பருவமழை, சாகுபடி மற்றும் பயிர்களின் நிலைமை ஆகியவற்றை மத்திய அரசு தினசரி கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.





