சென்னை மாநகராட்சி கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி, பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்குவதற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டுகளில் மூலதன செலவுகள் அதிகரித்ததுடன், மத்திய–மாநில அரசுகளிடமிருந்து போதிய நிதி வராததும் இந்த நெருக்கடியை தீவிரப்படுத்தியதாக கூறப்படுகிறது. நிதிநிலை சீராக ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மழைநீர் வடிகால், சாலை சீரமைப்பு, பள்ளி கட்டடங்கள், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல உட்கட்டமைப்பு பணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்காக ஆசிய வளர்ச்சி வங்கி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி, உலக வங்கி உள்ளிட்டவற்றிடமிருந்து ரூ.2,000 கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளதாகவும், அதற்கான வட்டியாக ஆண்டுக்கு ரூ.95.20 கோடி செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கே ஆண்டுக்கு ரூ.2,437.40 கோடி செலவாகிறது. நிர்வாகச் செலவாக ரூ.328.21 கோடி, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.2,232.70 கோடி செலவிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் நிதி வரவு குறைந்ததால், பணப்புழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில், ரூ.800 கோடிக்கு மேற்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் முந்தைய தி.மு.க. ஆட்சியின் இறுதி நாட்களில் ஒதுக்கப்பட்ட வேளச்சேரி மேம்பாலப் பணியும் இடம்பெறுவதாகவும் அதிகாரிகள் கூறினர். மேலும், ஏற்கனவே செய்யப்பட்ட பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.2,000 கோடி அளவில் பாக்கி இருப்பதாகவும், புதிய பணிகளை தொடங்க வேண்டாம் என துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வருவாயை உயர்த்த சொத்து வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிலுவை சொத்து வரியை வீடு வீடாக சென்று வசூலிப்பதுடன், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு ரூ.300 கோடி சொத்து வரி கட்டாயம் வசூலிக்க வேண்டும் என பிரிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகங்களின் வாடகை வசூலிலும் கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறினர். நிதிநிலை சீராகும் வரை பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கான தனிப்பாதை, விபத்து அபாயம் உள்ள சாலை வளைவுகள் சீரமைப்பு, வெள்ள பாதிப்பை குறைக்க நீர்நிலைகள் சீரமைப்பு போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; பின்னர் ஒப்பந்ததாரர்களின் பாக்கி தொகை விடுவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.