சென்னை: துறை வாரியான ஆய்வு கூட்டங்களில் பங்கேற்ற அதிகாரிகளிடம், தங்களது துறைகளின் ஆண்டு செயல் திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் விரிவான விளக்கம் கேட்டார்.

தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தயாராகி வருகின்றன. அதனுடன், புதிய அறிவிப்புகளுக்கான முன்மொழிவுகளும் பரிசீலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு, முதல்வர் துறை வாரியாக ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்.

நேற்று காலை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தொடர்பாகவும், பிற்பகலில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தொடர்பாகவும் ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றன. இதில் துறை அமைச்சர்கள், செயலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், துறைகளில் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பட்ஜெட்டில் அறிவிக்கக்கூடிய புதிய முயற்சிகள் குறித்து துறை செயலர்கள் எடுத்துரைத்தனர். இதையடுத்து, ஒவ்வொரு துறையும் 1 ஆண்டு, 3 ஆண்டு, 5 ஆண்டு செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார். மேலும், ஓராண்டுக்குள் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் என்னென்ன என்பதையும் கேட்டு பதில்கள் பெற்றார்.

மேலும், ஆணவக் கொலை தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.