சட்டசபை தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக முதல்வர் விஜய் நாளை கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஏற்பாடுகளின்படி, கலெக்டர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர், மனவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள தனியார் நிறுவனமான ‘எவர்கிரீன் கோதாரி’ காலணி தயாரிப்பு நிறுவனத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார். தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்யும் இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெண்ணெய்மலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான ‘அட்லஸ்’ கலையரங்க வளாகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரான 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார்.
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக சுமார் 5,000 பேர் அமரும் வகையில் பிரமாண்ட கூடாரம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பயணத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.





