இளம் வாக்காளர்களை ஈர்க்கும் நோக்கில் திமுகவில் புதிய அணிகளை உருவாக்குவது குறித்து மறுசீரமைப்பு குழு ஆலோசித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட கள ஆய்வு குழு, கட்சி தலைமையிடம் அளித்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் வேட்பாளர்கள் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்னணியில் அமைப்பு ரீதியான மாற்றங்களை பரிந்துரைக்க மறுசீரமைப்பு குழு அமைக்கப்பட்டது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் லண்டன் புறப்படும் முன் அவருடன் குழுவினர் ஆலோசனை நடத்தியதாகவும், அதன் பின் ஆலோசனைகள் தொடர்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கட்சி நிர்வாகிகள் கூறுகையில், இளைஞர்களை கவரும் வகையில் இளம் டாக்டர்கள், இளம் பொறியாளர்கள், இளம் ஆசிரியர்கள், இளம் வழக்கறிஞர்கள் என தனித்த அணிகள் உருவாக்கப்படலாம். அவர்களுக்கு அரசியல் பயிற்சி முகாம்கள் நடத்தி, இளைய தலைமுறைக்கு அதிக அளவில் பதவிகள் வழங்கும் பரிந்துரைகளும் வரலாம் என தெரிவித்தனர்.

த.வெ.க. வெற்றிக்குப் பிறகு கட்சியை வலுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களை சமாளிக்க இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் நியமிக்கும் திட்டம் பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், ‘தொகுதி செயலர்’ என்ற புதிய பதவியை உருவாக்கி, அந்தப் பதவிகளில் பலவற்றை இளைஞரணியினருக்கு வழங்க திட்டமிடப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கிறது.