பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மேம்படுத்திய பினாகா நீண்ட தூர வழிநடத்தும் ராக்கெட்டின் பறக்கும் சோதனை, ஒடிஷா சந்திப்பூரில் வெற்றிகரமாக நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தூரங்களில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட பினாகா ராக்கெட்டுகள் ஏற்கனவே ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளன. ராணுவத்தின் பீரங்கி திறனை வலுப்படுத்தும் நோக்கில் பினாகா ராக்கெட் அமைப்பை டிஆர்டிஓ தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
இந்தச் சோதனை சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் நடைபெற்றது. சோதனையின் போது திட்டமிட்டபடி அனைத்து இயக்கங்களையும் ராக்கெட் மேற்கொண்டு, முன்கூட்டியே கணிக்கப்பட்ட பாதையை துல்லியமாக பின்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது.
டிஆர்டிஓ தகவலின்படி, 60 கிமீ தூரத்தில் இருந்த இலக்கை ராக்கெட் துல்லியமாக தாக்கியது. மேலும், ராணுவத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள பினாகா ராக்கெட் லாஞ்சரிலிருந்தே இந்த ஏவுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம், வெவ்வேறு தூர திறன் கொண்ட பினாகா ராக்கெட்டுகளை ஒரே ஏவுதளத்தில் இருந்து இயக்க முடியும் என்பதும் நிரூபிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.





