ராஜினாமா செய்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களில் மூவர், சென்னையில் சபாநாயகர் பிரபாகரை புதன்கிழமை நேரில் சந்தித்து ராஜினாமா தொடர்பான விளக்கத்தை அளித்தனர்.

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நால்வர்—பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா—தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். சட்டசபையில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் இவர்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து சபாநாயகர் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார். அதே நேரத்தில், இந்த ராஜினாமாவை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், கொறடா உத்தரவை மீறியதாகக் கூறி கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் புகாரும் அளிக்கப்பட்டது.

அதிமுக புகாரின் அடிப்படையில் நடவடிக்கை தொடங்கியிருப்பதாக சபாநாயகர் முன்பே அறிவித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டிருந்தார். இந்த நிலையில், இசக்கி முத்துவைத் தவிர்த்து மற்ற மூவரும் இன்று சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர்.