இந்தியாவில் மருத்துவப் பணியில் ஈடுபட வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் எழுத வேண்டிய தகுதித் தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 12.78% ஆக மட்டுமே இருந்ததால் தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு இருமுறை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் நடத்தும் இந்தத் தேர்வு, கடந்த ஜூன் மாதம் முதல் மற்றும் இரண்டாம் வினாத்தாள்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் 37,428 பேர் பதிவு செய்த நிலையில் 36,280 பேர் தேர்வு எழுதினர்.

சமீபத்தில் வெளியான முடிவுகளின்படி 4,635 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கத்தின் வெளிநாட்டு பிரிவினர், இரண்டாம் வினாத்தாளில் படம் மற்றும் வீடியோ அடிப்படையிலான கேள்விகள் இடம்பெற்றதே பெரும்பாலானோர் தேர்ச்சி பெறாததற்கான முக்கிய காரணம் என கூறினர்.

சங்கச் செயலர் வசந்த் பிலிப் அபிஷேக் கூறுகையில், பல தேர்வு மையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாததால் தேர்வர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், எந்த முன் அறிவிப்புமின்றி வீடியோ அடிப்படையிலான வினாக்கள் கேட்கப்பட்டதால் நேர பற்றாக்குறை ஏற்பட்டு, 20 மதிப்பெண்கள் வரை உள்ள கேள்விகளுக்கு சிலர் பதிலளிக்க முடியாமல் போனதாகவும் கூறினார்.

தேர்ச்சி பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் 150 என்ற நிலையில், 149 மதிப்பெண் பெற்று ஒரு மதிப்பெண்ணில் 327 பேர் தோல்வியடைந்ததாகவும், 147 மற்றும் 148 மதிப்பெண்களை 1,022 பேர் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். வீடியோவின் நீளம், வழங்கப்பட்ட நேரம் உள்ளிட்ட அம்சங்களை பரிசீலித்து தேர்வு முறையை சீரமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.