தமிழக வெற்றி கழக (த.வெ.க.) எம்.எல்.ஏ. தொடர்பான ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் முன் ஜாமின் வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்குமாறு சிலர் தொலைபேசியில் பேரம் பேசியதாக புகார் அளித்தார். இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அரும்பாக்கத்தைச் சேர்ந்த ‘யூடியூபர்’ திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் வெளிநாடு செல்லாமல் தடுக்கும் வகையில் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினர்; நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் மனு விசாரணைக்கு வந்தது.
வாதங்களில், புகாரில் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படவில்லை என்றும், பணப் பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் தரப்பு தெரிவித்தது. காவல் துறை தரப்பு, ஜூன் 25, 26, 27 தேதிகளில் சென்னை கிண்டி தனியார் ஹோட்டலில் சந்தித்து பேசியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், சதிக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளதாகவும் வாதிட்டது; கைது செய்யப்பட்ட ஒருவரின் வாக்குமூலத்தில் பெரிய தொகைகள் குறித்து கூறப்பட்டதாகவும் குறிப்பிட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும், சென்னை திருவல்லிக்கேணி காவல் துறை விசாரணை அதிகாரி முன் தினமும் காலை மற்றும் மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும்; மறு உத்தரவு வரும் வரை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.





