சாலை பணிகளில் ரூ.3.23 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் திமுக அமைச்சர் மற்றும் திருவண்ணாமலை எம்எல்ஏ எ.வ.வேலு வரும் ஜூலை 15ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கரூரில் சாலை போடாமல் பணிகள் நடந்ததாக காட்டி ரூ.3.23 கோடி அளவில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் 9 பேர் உட்பட, லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 25ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வேலுவின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக ஜூலை 3ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறி நேரில் ஆஜராவதில் விலக்கு கோரினார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்த வழக்கை ரத்து செய்யவும், லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யவும் கோரி வேலு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜூலை 15ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் லுக் அவுட் நோட்டீஸுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், வழக்கை ரத்து செய்யக் கோரும் மனுவுக்கு ஜூலை 27ம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.