மெட்டா நிறுவனத்தில் மிக உயர்ந்த சம்பளத்தில் இருந்த பணியை விட்டு, சொந்தமாக ஏஐ ஸ்டார்ட்அப் தொடங்கிய ஐஐடி மும்பை பட்டதாரி ரிஷப் அகர்வால் கவனம் பெற்றுள்ளார். ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.5 கோடி) சம்பளமாக நிர்ணயிக்கப்பட்ட பணியை அவர் ராஜினாமா செய்து தொழில்முனைவோராக மாறினார்.

ஜேஇஇ நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் 33வது இடம் பெற்ற அவர், ஐஐடி மும்பையில் கணினி அறிவியல் பட்டம் முடித்தார். பின்னர் கனடாவில் உள்ள MILA என்ற ஏஐ ஆராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்டி முடித்ததாகவும், கூகுள் பிரெயின், கூகுள் டீப்மைன்ட், வேமோ, மெட்டாவின் சூப்பர் இன்டலிஜென்ஸ் ஆய்வகம் உள்ளிட்ட இடங்களில் ஏஐ தொடர்பான பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்கில் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உள்ளது.

2025ஆம் ஆண்டு மெட்டாவின் சூப்பர் இன்டலிஜென்ஸ் ஆய்வகத்தில் இணைந்த அவர், 5 மாதங்களிலேயே அந்தப் பணியை விட்டு வெளியேறினார். தனது பதிவில், மெட்டா, கூகுள், டீப்மைன்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் சுமார் 7.5 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு புதிய வகை ‘ரிஸ்க்’ எடுக்க முடிவு செய்ததாகவும், வேகமாக மாறும் உலகில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே பெரிய ரிஸ்க் என மெட்டா சிஇஓ மார்க் ஜக்கர்பெர்க் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் வேறு பன்னாட்டு நிறுவனங்களில் சேராமல், ‘Periodic Labs’ என்ற ஸ்டார்ட்அப்பை தொடங்கி பணியாற்றத் தொடங்கினார். இன்றைய அறிவியல் பரிசோதனைகளில் சாத்தியங்களை உறுதிப்படுத்துவது, புதிய பொருட்கள், மருந்துகள் மற்றும் இயற்பியலில் புதிய கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்துவது ஆகியவை நிறுவனத்தின் நோக்கமாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வகத்திற்கு என்விடியா மற்றும் ஜெப் பெஜோஸ் ஆதரவு கிடைத்துள்ளதாகவும், இதனால் அறிவியல் ஆராய்ச்சி உலகில் கவனிக்கப்படும் நிறுவனமாக Periodic Labs உருவாகி வருவதாகவும் செய்தி தெரிவிக்கிறது.