மதுரையில் வறண்ட நிலையில் உள்ள வைகையாற்றை துாய்மைப்படுத்தவும் சீரமைக்கவும் தன்னார்வலர்கள் களம் இறங்க முயன்ற நிலையில், முறையான அனுமதி அவசியம் எனக் கூறி போலீசார் பணியைத் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த வாரம் மதுரையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.வி. அர்லேக்கர், வைகையில் நீர் இல்லாததைப் பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும், இளைஞர்கள் வைகையை சுத்தப்படுத்தும் முயற்சியை இலக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பேசியிருந்தார்.

இந்த விவகாரம் அரசியல் கவனத்தைப் பெற்ற நிலையில், கவர்னரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ஒருவர் விமர்சனம் செய்தார். இதற்கிடையே யானைக்கல், ஆழ்வார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து துாய்மைப் பணியை மேற்கொள்ள சில தன்னார்வ அமைப்புகள் முன்வந்தன. ஒரு அமைப்பு ஜூலை 4-ம் தேதி பாதுகாப்பும் அனுமதியும் கோரி போலீசில் மனு அளித்ததாக தெரிவித்தது.

ஆனால் துாய்மைப் பணி நடைபெறவிருந்த நாளில், வைகை பராமரிப்பு நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்தத் துறைகளின் அனுமதி கடிதம் இல்லாமல் போலீசால் அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்து தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் தரப்பில் இது வழக்கமான நடைமுறை என்றும், தேவையான அனுமதி கடிதங்கள் இருந்தால் அனுமதி வழங்கியிருப்போம் என்றும் கூறப்பட்டது. தன்னார்வலர்கள் தரப்பில், பிற துறைகளின் அனுமதி தேவை என்பதை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் பெற்றுக் கொடுத்திருப்போம் என்றும், மனுவில் கவர்னரின் அழைப்பை குறிப்பிட்டதாலேயே அனுமதி மறுக்கப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.