மெல்போர்னில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரு நாடுகளின் தொழில் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தியா–ஆஸ்திரேலியா உறவை கிரிக்கெட் போட்டிகளுடன் ஒப்பிட்டு அவர் பேசியது கவனத்தை ஈர்த்தது.
இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி, கொள்கை சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மாற்றம் மற்றும் விரிவடையும் புதிய கண்டுபிடிப்பு சூழல் ஆகியவை ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்று மோடி கூறினார். உற்பத்தி, எரிசக்தி, உள்கட்டமைப்பு, நகர்ப்புற மேம்பாடு, விமான போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு, உணவு பதப்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளதாகவும், இந்தியாவின் நீண்டகால முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இரு நாடுகளின் பலம் மக்கள்-மக்கள் உறவுகளில்தான் இருப்பதாக குறிப்பிட்ட மோடி, இந்திய வம்சாவளியினர் ஆஸ்திரேலியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு அளிக்கின்றனர் என்றார். இந்திய மாணவர்கள் கல்வி கற்க விரும்பும் நாடாக ஆஸ்திரேலியா இருப்பதையும், ஆஸ்திரேலிய பல்கலைகழக வளாகங்கள் இந்தியாவில் தொடங்கப்படுவது கூட்டுறவில் புதிய அத்தியாயமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உயர்கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் ஆழமான ஒத்துழைப்பு இரு நாடுகளின் திறமையாளர்களுக்கு எதிர்கால உலகளாவிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், வருங்காலங்களில் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் போன்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் இரு நாடுகளிலும் நடைபெற உள்ளதால், விளையாட்டு ஒத்துழைப்பு அதிகரித்து, விளையாட்டு உள்கட்டமைப்பில் முதலீட்டு வாய்ப்புகளும் உருவாகும் என்றார்.
கிரிக்கெட் உவமையில், இந்தியா–ஆஸ்திரேலியா ராஜதந்திர உறவின் “மொழி” கிரிக்கெட் என கூறிய மோடி, நம் உறவின் நோக்கங்கள் ஒருநாள் போட்டியைப் போலவும், முடிவுகள் டி20 போல வேகமாகவும், கூட்டுச் செயல்பாடு டெஸ்ட் போட்டியைப் போல ஆழமும் நீளமும் கொண்டதாகவும் விளக்கினார். நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிஸ் “ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டாகி பலமாகும்” என கூற, மோடி “ஒன்றும் ஒன்றும் அருகருகே நின்றால் பதினொன்று ஆகிவிடும்” என பதிலளித்ததால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.





