நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி தனி அறை பெட்டி ‘ஹனிமூன் சூட்’ போல அலங்கரிக்கப்பட்டதாகக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் ஜால்னா நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில், அந்த அறை வெள்ளை–சிவப்பு பலூன்கள், இருக்கைகளில் இதய வடிவில் ரோஜா இதழ்கள், படுக்கைகளில் மலர்கள், மேலும் ‘ஐ லவ் யூ’ என்ற எழுத்துகளுடன் அலங்கரிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பயணத்தை நினைவாக மாற்ற புதுமணத் தம்பதியினர் இந்த அலங்காரத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் பலூன்கள், காகிதப் பொருட்கள் எளிதில் தீப்பற்றக்கூடும் என்பதால் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை சில நெட்டிசன்கள் எழுப்பினர்.
இந்த விவகாரம் குறித்து ரயில்வே வெளியிட்ட விளக்கத்தில், கடந்த 6ம் தேதி பயணித்த தம்பதியினர் தாங்கள் முன்பதிவு செய்திருந்த முதல் வகுப்பு ஏசி அறையை தனியார் அலங்கார நிறுவனத்தின் மூலம் அலங்கரித்ததாக தெரிவித்துள்ளது. உரிய அனுமதி இல்லாமல் அந்த நிறுவன ஊழியர் ரயில் பெட்டிக்குள் நுழைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சம்பவ நேரத்தில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்; துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனுமதியின்றி நுழைவு, டிக்கெட் இல்லாமல் பயணம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அலங்கார நிறுவன ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது; விசாரணை முடிவின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.





