தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது மற்றும் தடையில்லா சான்று பெறுவது தொடர்பான லஞ்ச விவகாரத்தில், புகார் அளிக்க வேண்டாம் என மர்ம நபர்கள் மிரட்டுவதாகவும், அதனால் பள்ளி நிர்வாகிகள் அச்சத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்று வழங்க பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக முன்பே குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அப்போது பள்ளி நிர்வாகிகள் புகார் அளிக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில் தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டவிரோத வசூல் குறித்து பல தனியார் பள்ளிகள் புகார் அளிக்கத் தொடங்கின. ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில், “தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்” எனும் பதிவு செய்யப்படாத அமைப்பின் தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டார்.

தனியார் பள்ளி சங்க வட்டாரங்கள் கூறுகையில், ஒவ்வொரு பள்ளியிடமும் ரூ.30 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும், மேலும் புகார்கள் வராமல் தடுக்கும் நோக்கில் அரசகுமாருக்கு நெருக்கமான சிலர் பள்ளி நிர்வாகிகளை அச்சுறுத்துவதாகவும் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவை கூறின.