சென்னை புழல் மத்திய சிறையின் உயர் பாதுகாப்புப் பிரிவில் கலவரம் ஏற்படுத்த முயன்றதாக கூறப்படும் திட்டம், ரகசிய தகவலின் அடிப்படையில் சிறை காவலர்களால் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாத வழக்குக் கைதிகள் மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் இதில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜ நிர்வாகிகள் மற்றும் ஹிந்து மதத் தலைவர்கள் தொடர் கொலைகள் நடந்த வழக்கில், ‘அல் முஜாகிதீன்’ அமைப்பைச் சேர்ந்ததாக கூறப்படும் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் புழல் சிறையின் உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, சில கைதிகள் சொகுசாக வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள கூட்டாளிகளுடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு சதி திட்டம் தீட்டியதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, உயர் பாதுகாப்புப் பிரிவில் கண்காணிப்பு மேலும் கடுமைப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், சமீபத்தில் புழல் சிறைக்குள் ‘வெள்ளைக்காளி’ என்ற காளீஸ்வரனை, ‘லாலி மணிகண்டன்’ கும்பல் ஒரு கோடி ரூபாய் விலை பேசி கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து கைதிகளிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணையிலிருந்து கவனம் திசைதிருப்பும் வகையில் கலவரம் தூண்ட முயற்சி நடந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனைகள் நடத்தி, கைதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து முயற்சியை தடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இலங்கை சிறையில் கலவரம் தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து மாநிலம் முழுவதும் சிறைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும், புழலில் நடக்க இருந்ததாக கூறப்படும் கலவரமும் முன்கூட்டியே தடுக்கப்பட்டதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.