திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரை தாது மணல் மற்றும் ஆற்று மணல் எடுப்பதற்கான தடையைத் தொடர வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதற்கு எதிராக தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழக கடலோரப் பகுதிகளில் கனிம மணல் அகழ்வுக்கு 2013 ஆகஸ்ட் மாதத்தில் மாநில அரசு தடை விதித்திருந்தது. இருப்பினும் அந்தத் தடையை மீறி சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது, பதுக்குவது, கடத்துவது போன்ற செயல்கள் தொடர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்ததாக கூறப்படும் பெரிய அளவிலான தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில், 2025-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற உத்தரவிட்டது. மேலும் அரசுக்கு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்ட ரூ.5,832 கோடி இழப்பை தனியார் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கவும், அவர்களின் இருப்புகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுகளுக்கு எதிராக தனியார் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகின. நீதிபதிகள் ஆர். மகாதேவன், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, முன்பே விதிக்கப்பட்ட குத்தகை/அகழ்வு தொடர்பான தடை தொடரும் என தெரிவித்தது.

உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு அனைத்து உண்மைகளையும் விரிவாக ஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அரசியலமைப்பின் 136-வது பிரிவின் கீழ் தலையிடத் தேவையான பிழை எதுவும் இல்லை என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், சட்டவிரோத சுரங்கம் மற்றும் மணல் திருட்டு தொடர்பான புகார்களை கனிம வளத்துறை, புவியியல் துறை அல்லது மாவட்ட காவல் துறைக்கு பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.