சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்கேடு கடந்த 50 நாட்களில் திடீரென உருவானது அல்ல; கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவே என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு செய்வது நீண்டகால மரபாக இருந்து வருகிறது என்றார். தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் ஆய்வு செய்ததில் மரபு மீறல் எதுவும் இல்லை என்றும் கூறினார்.
அந்த ஆய்வின்போது அமைச்சர் கீர்த்தனா மாணவியுடன் பேசியதை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டார். மாற்றுத்திறனாளி பெற்றோரின் மகளாக பிறந்து, தமிழ் வழிக் கல்வியில் பயின்று பின்னர் ஆங்கிலத் திறமை பெற்றவர் என்பதையும், மாணவியிடம் அக்கா ஸ்தானத்தில் இருந்து பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டணி அரசியல் குறித்து, கூட்டணி கட்சிகளை நண்பர்களாகவே பார்க்கும் அணுகுமுறை தங்களிடம் இருப்பதாக ராஜ்மோகன் கூறினார். கூட்டணி தலைவர்களுக்கு எந்தவித நெருக்கடியும் தரமாட்டோம் என்றும், வி.சி.க. தலைவர் திருமாவளவன் தி.மு.க. உடன் நட்பு தொடரும் என கூறியதை ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.




