சென்னை: சில பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின் தடைகளை நிரந்தரமாகத் தடுக்க, மின் வாரியம் புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.

மின் வாரியத்தின் விளக்கப்படி, சில துணை மின் நிலையங்கள் மற்றும் மின் வழித்தடங்களில் சாதனக் கோளாறுகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதால் மின் விநியோகம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்தப் பிரச்னைக்கு நிலையான தீர்வு காண ‘ஆர்.டி.இ.பி.’ (மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் துண்டிப்புகளை ஒழிக்கும் முன்னெடுப்பு) திட்டத்தை நடைமுறைப்படுத்த மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

திட்டத்தின் கீழ், கடந்த ஆறு மாதங்களில் மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்பட்ட துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை பொறியாளர்கள் அடையாளம் காண வேண்டும். மின் தடை எத்தனை முறை ஏற்பட்டது, நீடித்த காலம், பாதிக்கப்பட்ட நுகர்வோர் எண்ணிக்கை, மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டதா, பருவநிலை/வானிலை காரணமா என்பன உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கென தனி பதிவேடு பராமரிக்கப்படும். ஆய்வின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட இடங்களில் புதிய துணை மின் நிலையம் அமைத்தல், கூடுதல் டிரான்ஸ்பார்மர் நிறுவல், பழைய மின் சாதனங்களை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.