கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் தொலைபேசியில் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் வழக்கில், விசாரணை வட்டம் விரிவடைந்த நிலையில் இரு மருத்துவர்களிடம் சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்எல்ஏ அளித்த புகாரில், சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சபாநாயகருக்கு எதிராக ஓட்டளிக்குமாறு பேரம் பேசியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமாருக்கு முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், முக்கிய ஐந்து பேர் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர்; அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை மேலும் விரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த ரமேஷ்குமாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், சிங்கப்பூரைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது; தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் நபர்களுடன் அவர் சிங்கப்பூரிலிருந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.