விசிக தலைவர் தொல். திருமாவளவன் திமுகவும் தவெகவும் அகில இந்திய அளவில் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறியதாக வெளியான செய்தி தன்னை தூக்கி வாரிப்போட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக தொடர்ந்து இருப்பதாகவும் கூறினார். அந்தச் செய்தியை மேற்கோள் காட்டி, “வட துருவமும் தென் துருவமும் ஒன்று சேர முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அமைச்சரவையில் பங்கெடுப்பது குறித்து பேசப்படுவது தன்னை அதிர்ச்சியடையச் செய்ததால் தான் கடுமையாக பதிலளித்ததாக வைகோ விளக்கினார். திருமாவை புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் அவர் கூறினார்.

திருமாவளவன் அரசியலில் உயர வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக தன்னால் இயன்ற உதவிகளை செய்ததாகவும், எதிர்காலத்திலும் ஆதரவு தொடரும் என்றும் வைகோ தெரிவித்தார். அவரது வார்த்தைகள் மனவருத்தம் ஏற்படுத்தியிருந்தால், அந்தக் கருத்தை வாபஸ் பெற்று வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.