கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி அருகே ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, மண்ணில் புதைந்திருக்கக் கூடியவர்களை கண்டறிய மோப்ப நாய்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இரவு பகலாக தேடுதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேப்பாடி அருகேயுள்ள கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், அதனை ஒட்டிய மலைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது பணியில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரபான், பீகாரைச் சேர்ந்த பிகாஷ்குமார், ஜார்க்கண்டைச் சேர்ந்த அன்மோல் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்கப்பட்ட 7 பேர் மேப்பாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 5 பேர் இன்னும் மண்ணில் புதைந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறை, போலீஸ், வனத் துறை மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் நான்கு குழுக்களாகப் பிரிந்து மோப்ப நாய்களுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனாட்சி ஆற்றின் கரையோரத்தில் மண், கற்களை அகற்றியும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இடிபாடுகளை அகற்றியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என காங்கிரஸ் சேர்ந்த கேரள முதல்வர் சதீசன் அறிவித்துள்ளார்.





