இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரரும் அவசர மருத்துவ நிபுணருமான அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) நோக்கி தனது முதல் பயணத்திற்குத் தயாராகி வருகிறார். ஜூலை 14ல் கஜகஸ்தானின் பைக்கோனூர் ஏவுதளத்திலிருந்து ரோஸ்கோஸ்மோஸ் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலத்தில் அவர் புறப்பட உள்ளார்.

49 வயதான மேனன், ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோத்ர் துப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோருடன் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம் சுமார் எட்டு மாதங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் உக்ரைன் குடியேறிப் பெற்றோருக்கு மினியாபோலிஸில் பிறந்த மேனன், மருத்துவம், ராணுவம் மற்றும் மனித விண்வெளிப் பயணம் ஆகிய துறைகளில் அனுபவம் பெற்றவர். அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிய காலத்தில், ‘ஆபரேஷன் எண்டியூரிங் ப்ரீடம்’ நடவடிக்கைக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டார்.

எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி செல்லும் மலையேறுபவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கியதுடன், ரோட்டரி தூதரக அறிஞராக இந்தியாவில் ஓராண்டு தங்கி போலியோ தடுப்பூசி முயற்சிகளுக்கும் பங்களித்துள்ளார். 2014ல் நாசாவில் விமான அறுவை சிகிச்சை நிபுணராக இணைந்து ஐஎஸ்எஸில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு ஆதரவளித்த அவர், 2018ல் ஸ்பேஸ்எக்ஸுக்கு மாறி நிறுவனத்தின் மருத்துவத் திட்டத்தை அமைப்பதில் பங்கு வகித்தார்.

2021 டிசம்பரில் நாசா விண்வெளி வீரராகத் தேர்வான மேனன், இரண்டு ஆண்டு பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்த பின்னர் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐஎஸ்எஸில் தங்கியிருக்கும் போது, நீண்டகால விண்வெளிப் பயணம் மனித உடலில் ஏற்படுத்தும் விளைவுகளை ஆய்வு செய்யும் சோதனைகளை நடத்துவதுடன், எதிர்கால நீண்டகால பயணங்களில் பூமியிலிருந்து கிடைக்கும் மருத்துவ உதவியைச் சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திய ஆய்வுகளையும் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.