சென்னை: ‘மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம்; தமிழகத்தை காப்போம்’ என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் அருகே இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை நகரின் சில பகுதிகளில் மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையில், பல டாஸ்மாக் கடைகள் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பஸ் நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே செயல்படுகின்றன என அவர் கூறினார்.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதேபோல் 500 மீட்டர் வரம்புக்குள் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ அல்லது வீ தி லீடர்ஸ் அமைப்பின் மூலமாகவோ மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், ‘மாறுவோம், மாற்றுவோம்’ எனவும் அவர் தெரிவித்தார்.