தமிழகத்தின் நிரந்தர கவர்னராக கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 12-ஆம் தேதி ராஜேந்திர அர்லேக்கர் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக பொறுப்பேற்றார்.
2021 ஜூலை 13-ஆம் தேதி கவர்னர் பதவியில் பொறுப்பேற்ற அவர், வரும் ஜூலை 13-ஆம் தேதி ஐந்தாண்டுகளை நிறைவு செய்ய உள்ளதால், பதவி நீட்டிப்பு குறித்து எதிர்பார்ப்பு எழுந்தது. இதன் பின்னணியில், கடந்த 1-ஆம் தேதி டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்து பேசினார்; அப்போது பதவி நீட்டிப்பு தொடர்பாக விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
கேரளாவிலும் தமிழகத்திலும் அர்லேக்கரின் செயல்பாடுகள் அமித் ஷாவுக்கு திருப்தி அளித்துள்ளதாகவும், தமிழகத்தில் தனிப்பெரும்பான்மை இல்லாமல் த.வெ.க. ஆட்சி அமைத்தபோது ஏற்பட்ட “அசாதாரண சூழலை” அவர் கையாண்ட விதத்தை ஷா பாராட்டியதாகவும் அந்த தகவல் கூறுகிறது.
பல மாநிலங்களில் கவர்னர்கள் மாற்றம் செய்யப்படலாம் என்ற சூழலில், தமிழகத்தின் நிரந்தர கவர்னராக அர்லேக்கரை நியமித்து, கேரளாவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவரை கவர்னராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே தமிழக விவகாரங்களில் அவர் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், குறிப்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன பிரச்னைக்கு சுமூக தீர்வு காண முயற்சி செய்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கிறது.




