சென்னை: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் பல சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 2025 டிசம்பர் 27 அன்று போட்டித் தேர்வை நடத்தியதாகவும், 48 பாடப்பிரிவுகளுக்கான இந்தத் தேர்வில் சுமார் 42,000 பேர் பங்கேற்றதாகவும் கூறினார். 2026 ஜூன் 25 அன்று வெளியான முடிவுகள் தேர்வாளர்கள் மத்தியில் சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

150 மதிப்பெண்களுக்கான பாடத் தேர்வும், 50 மதிப்பெண்களுக்கான விளக்கவுரை (Descriptive) தேர்வும் நடைமுறையில் இருந்த நிலையில், இரண்டு பகுதிகளின் மதிப்பெண்களில் பெரிய முரண்பாடுகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். உதாரணமாக, தமிழ்த் துறையில் 111/150 பெற்றவருக்கு விளக்கவுரையில் 0, கணினி அறிவியலில் 107/150 பெற்றவருக்கு 1/50, இயற்பியலில் 54/150 பெற்றவருக்கு 49/50 வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதேபோன்ற நிலை 43 பாடப்பிரிவுகளில் காணப்படுவதாகவும், பாட மதிப்பெண் அதிகமாக உள்ளவர்களுக்கு விளக்கவுரையில் மிகக் குறைந்த மதிப்பெண்களும், குறைவாக உள்ளவர்களுக்கு அதிக மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் 8.25, 24.75 போன்ற தசம மதிப்பெண்கள் விளக்கவுரை மதிப்பீட்டில் எப்படி வழங்கப்பட்டன என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக கூறி, இதனால் தரவரிசையில் பல நூறு இடங்கள் வரை மாற்றம் ஏற்பட்டதாகவும், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் அதிகரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதனால் விளக்கவுரை மதிப்பீட்டு முறையை ஆய்வுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், தேர்வை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை அவர் வலியுறுத்தினார். மேலும் 2024 அரசாணையில் 4,000 பணியிடங்களை நிரப்ப உத்தரவு இருப்பதாகவும், ஆனால் தேர்வு 2,708 பணியிடங்களுக்கு மட்டுமே நடந்ததாகவும் கூறிய அவர், சென்னை உயர்நீதிமன்றம் 4,000 பணியிடங்களையும் ஆறு மாதங்களில் நிரப்ப உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டு, மீதமுள்ள பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.