இந்தியாவின் அணுமின் உற்பத்தி மற்றும் துாய்மை எரிசக்தி இலக்குகளை முன்னேற்றும் வகையில், நீண்டகாலத்திற்கு இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான முக்கிய அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மெல்போர்னில் கையெழுத்தானது.

இந்தியா–ஆஸ்திரேலியா மூன்றாவது உச்சி மாநாட்டின் ஓரமாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. செய்தியாளர்களை சந்தித்த மோடி, இந்த ஒப்பந்தம் இந்தியாவின் துாய்மை எரிசக்தி திட்டங்களுக்கு புதிய வேகத்தை தரும் என தெரிவித்தார்.

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள மோடி, முதலாவதாக இந்தோனேஷியாவைச் சென்றடைந்து அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் வரவேற்பைப் பெற்றார். அங்கு பல துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தான பின்னர், இரண்டாவது கட்டமாக ஆஸ்திரேலியாவை சென்றடைந்தார்.

அல்பனீஸ் கூறுகையில், 2015-ல் இரு நாடுகளுக்கு இடையே உருவான அணுசக்தி ஒத்துழைப்பு கட்டமைப்பின் அடிப்படையில், அமைதியான பயன்பாட்டுக்காக இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அணுசக்தி துறைக்கு அப்பாற்பட்டு, பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அரிய கனிமங்களின் வினியோகத் தொடரை சீரமைக்கவும் இரு நாடுகளுக்கும் இடையே கூடுதல் ஒப்பந்தங்களும் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டது.