மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கான காவிரி நீர் திறப்பு நடைபெறவில்லை. இதனால் ஆற்று பாசனத்தை நம்பியுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிரிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே நேரத்தில், காவிரி கூட்டு குடிநீர் திட்டங்களை சார்ந்த பல பகுதிகளில், மேட்டூர் நகராட்சி உட்பட, குடிநீர் விநியோகம் தடுமாறுகிறது.

அணை நீர் இருப்பு குறைவைக் காரணமாகக் காட்டி, ஜூன் 12 அன்று பாசனத்திற்கான நீர் திறக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான கால அட்டவணைப்படி சாகுபடி தொடங்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரான குடிநீர் வழங்க வேண்டும் எனக் கோரி மேட்டூர் நகராட்சி மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். உள்ளூரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவினாலும், சென்னையின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் தொடர்ந்து நடைபெறுகிறது.

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடியாக உள்ளது. சென்னைக்கான குடிநீர் தேவைக்காக 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு, அது கல்லணை வந்த நிலையில், அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றில் 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு கீழணையை அடைந்துள்ளது.

கீழணையிலிருந்து வடவாறு வழியாக 1,545 கனஅடி நீர் வீராணம் ஏரிக்கு அனுப்பப்படுகிறது; ஆனால் ஏரியை அடையும் போது அது சுமார் 1,000 கனஅடியாக குறைகிறது. வீராணம் ஏரியில் 41.90 அடிக்கு நீர் இருப்பு உள்ள நிலையில், சென்னைக்கு 73 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. வடவாறு வழியாக வீராணத்திற்கு வரும் நீரை பாசனத்திற்கு பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இதை பொதுப்பணித்துறை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.