கரூர் வெண்ணெய்மலையில் அவரது கட்சி சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு பேசினார். நீதிமன்றத்தின் கடும் விமர்சனங்களுக்குப் பிறகும் திமுக திருந்தவில்லை என்றும், இடைத்தேர்தலில் மக்கள் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கரூர் நெரிசல் சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், அது தன் வாழ்க்கையில் மிகுந்த வலியையும் காயத்தையும் ஏற்படுத்தியதாக கூறினார். பெரம்பலூர் செல்லும் வழியில் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் எச்சரித்தபோது பாதுகாப்பு கருதி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும், அதுபோல் கரூரிலும் முன்கூட்டியே எச்சரித்து கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம் என்றும் அவர் வாதிட்டார். தன்னை உள்ளே அழைத்து சென்று பின்னர் பழியைத் தன் மீது சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முயன்றதாகவும் குற்றம்சாட்டினார்.
தவெக ஆட்சியில் லஞ்சமில்லாத நிர்வாகம் நடக்கிறது என்றும், அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். கரூர் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்றும், அண்ணா பிறந்த நாளில் ‘தாய்மாமன் மோதிரம்’ திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்.
திமுக மீது தாக்குதல் தொடர்ந்த அவர், “தோண்ட தோண்ட ஊழல் வெளிவருகிறது” என கூறி, சென்னையில் பாலம் கட்டும் பணிக்கான டெண்டரில் செலவு அதிகமாக காட்டப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், எல்அன்ட்டி நிறுவனத்துடன் ரூ.18,600 கோடிக்கு மூன்று ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
மேகதாது அணை வழக்கில் திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததாகவும், தொகுதி மறுவரையறையை தனது அரசு ஏற்காது என்றும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் திருவள்ளுவர் சிலை மற்றும் வெள்ளி வாள் உள்ளிட்ட பரிசுகளும் அவருக்கு வழங்கப்பட்டன.





