முதல்வர் விஜய் இன்று கரூர் செல்கிறார். முதல்வராக பொறுப்பேற்ற பின் கரூர் மாவட்டத்திற்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 2025 செப். 7 அன்று அவர் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 285 நாட்களாக அவர் கரூர் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெண்ணெய்மலை அருகே உள்ள தனியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார். இதில் சுமார் 5,000 பேர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. மேலும், கரூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் ரோடு ஷோ நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கலெக்டர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டத்திலும் முதல்வர் பங்கேற்கிறார்.
மனவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணிகள் தயாரிக்கும் தனியார் எவர்கிரீன் கோதாரி காலணி தயாரிப்பு நிறுவனத்திற்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் பல்வேறு அரசு துறைகளில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.





