சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.31.25 கோடி செலவில் தொடங்கப்பட்ட கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்கப் பணிகள், முறையான திட்டமிடல் மற்றும் துறை ஒருங்கிணைப்பு இல்லாமல் நடைபெறுவதால் மக்கள் வரிப்பணம் வீணாகும் என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பணிகள் முடிந்த பிறகும் நெரிசல் மீண்டும் உருவாகும் சூழல் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மெட்ரோ, மின்சார ரயில், மாநகர பேருந்து உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து வசதிகள் உள்ள மையமாக கிண்டி உள்ளது. சிட்கோ பேருந்து நிலையம், ரேஸ்கோர்ஸ் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகம். ஆனால் ரேஸ்கோர்ஸ் பேருந்து நிலையத்தை ஒட்டிய சாலை குறுகலாக இருப்பதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்ல சுரங்கப்பாதை அல்லது நடைமேம்பாலம் போன்ற பாதுகாப்பு வசதி இல்லாததால் சாலை கடக்கும் போது விபத்து அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, 60 அடி அகலமாக உள்ள சாலையை 1 கி.மீ. தூரத்திற்கு 100 அடியாக விரிவாக்கம் செய்யவும், ரேஸ்கோர்ஸ் பேருந்து நிலையத்தை மேம்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டது. ரேஸ்கோர்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து நடைமேம்பாலம் அமைத்து ரயில்வே நடைமேம்பாலத்துடன் இணைத்து, சிட்கோ பேருந்து நிலையம் வரை இணைப்பை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது. உலக வங்கி, மாநில உள்கட்டமைப்பு மற்றும் மாநகராட்சி மூலதன நிதி வழியாக நிதி ஒதுக்கப்பட்டு, டி.எம்.எஸ். நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றல் மற்றும் நில ஆர்ஜிதம் முழுமையடையாத நிலையில் பணிகள் தொடங்கப்பட்டதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுவரை சுமார் 30% ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதுடன், அரசு மீட்டெடுத்த ரேஸ்கோர்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை திட்டத்திற்காக பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சாலை விரிவாக்கம் செய்யாமல் பழைய சாலையிலேயே வடிகால், நடைபாதை பணிகள் நடைபெறுகின்றன. நல்ல நிலையில் உள்ள பழைய வடிகாலின் அருகே புதிய வடிகால் கட்டப்படுவது, 4 அடி நடைபாதைக்கு பதிலாக 10 அடி நடைபாதை அமைக்கப்படுவது போன்ற காரணங்களால் வளைவு பகுதியில் சாலை அகலம் குறைந்து நெரிசல் அதிகரிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில், நிர்வாக குளறுபடி, ஆட்சி மாற்றம் மற்றும் அதிகாரிகள் மாற்றம் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ரேஸ்கோர்ஸ் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய சம்பந்தப்பட்ட துறைகள் ஒப்புதல் வழங்காததால் தாமதம் ஏற்பட்டதாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவில் பணியை முடிக்க வேண்டிய கட்டாயத்தால் கிடைக்கும் இடத்தில் பணிகளை மேற்கொள்வதாகவும் விளக்கம் அளித்தனர். பழைய வடிகால் அருகே புதிய வடிகால் கட்டுவது குறித்து விசாரிக்கப்படும் என்றும், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைமேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், சிட்கோ பேருந்து நிலையம் பகுதியில் நடைமேம்பாலப் பணிகள் நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.