சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி, தமிழ்நாடு முழுவதும் பள்ளி உரிமையாளர்களிடமிருந்து ரூ.100 கோடிக்கு மேல் பணம் வசூலிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தி.மு.க. செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவரும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவருமான பி.டி. அரசகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பல பள்ளி நிர்வாகிகளிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வழக்கில் அரசகுமார் மற்றும் சங்கப் பொருளாளர் முத்துகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து முத்துகுமார் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தங்களுக்கு நெருக்கமானவர் என கூறி மோசடியில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்தது. பள்ளி அங்கீகாரம் தொடர்பாக பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்ற அறிவிப்புக்குப் பிறகு இதுவரை 47 பள்ளி நிர்வாகிகளிடமிருந்து புகார்கள் பெறப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும் மாநிலம் முழுவதும் சுமார் 1,000 தனியார் பள்ளிகளிடம் தலா ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வசூலித்து, மொத்தம் ரூ.100 கோடிக்கு மேல் தொகை திரட்டப்பட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டுகளுடன் எந்த தொடர்பும் இல்லை என மறுத்த நிலையில், நீதிமன்றம் முத்துகுமாரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.