தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டசபைத் தேர்தலில் முதல்வர் விஜய் வெற்றி பெற்ற பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்ததால் மற்ற தொகுதிகளிலும் காலியிடங்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில், தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கக் கூடாது எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு தடை விதித்தது. குறிப்பாக, அந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசு, முதல்வர் விஜய் மற்றும் சட்டசபை செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





